Home இலங்கை சமூகம் மாவீரன் பண்டார வன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா

மாவீரன் பண்டார வன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா

0

வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை
எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரன் பண்டாரவன்னியன் தலைமையிலான படைகளால் 1803
ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 அன்று கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு இரண்டு பீரங்கிகள்
கைப்பற்றப்பட்டது.

இந்த நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த விழா வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில்  நினைவுகூரப்பட்டது.

வவுனியா 

வவுனியா (Vavuniya) மாநகரசபை
மற்றும் கலாசார பேரவையின் ஏற்ப்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள
பண்டாரவன்னியன் சிலையடியில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பண்டார வன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி
செலுத்தப்பட்டதுடன் பண்டாரவன்னியனின் நினைவுப்பேருரையினை சு.ஜெயச்சந்திரன்
நிகழ்த்தியிருந்ததுடன் ஏனைய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

மாநகர முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச
அதிபர் பி.எ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர், உள்ளூராட்சி மன்ற உப தவிசாளர்கள், ஆணையாளர்,
மாநகரசபையின் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்
உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

முல்லைத்தீவு சுற்று வட்டம்

இதேவேளை முல்லைத்தீவு சுற்று வட்டத்தில் உள்ள சிலை வளாகத்தில் மாவீரன் பண்டார வன்னியனின் 222ஆம் ஆண்டு வெற்றிநாள் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் தொ.பவுள்ராஜ் யூட் பிரசாத், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் 

அத்துடன் மாவீரன் பண்டார வன்னியன், முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி வெற்றி பெற்ற
222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையின் அருகில் இன்றைய தினம் குறித்த பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திரு.சி.குணபாலன் , மேலதிக
மாவட்ட செயலாளர் ( காணி ) திரு.ஜெயகாந் , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.
சற்குணேஸ்வரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜி.ஜெயரஞ்சினி உட்பட
மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version