உரம் கொள்வனவு செய்வதற்காக தனியார் உர நிறுவனங்களுக்கு பல வருடங்களாக செலுத்தப்படாமல் இருந்த 29,000 மில்லியன் ரூபா கடன்கள் அனைத்தையும் அரசாங்கம் தற்போது செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் தோட்ட அமைச்சில் இன்று (22) நடைபெற்ற இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உணவு உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயிகளின் வருமான மட்டத்தை அதிகரிப்பது மற்றும் இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கும் நோக்கத்துடன் நாட்டில் உள்ள 160 கிராமங்களை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமங்களாக மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீடு
இதற்காக அரசாங்கத்தினால் 1600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முதற்கட்டமாக ஒவ்வொரு கிராமத்திற்கும் 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.