ஓய்வூதியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவை வங்கி ஓய்வூதியர்களுக்கு வழங்குமாறு அரச வங்கி ஓய்வூதியர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் கடந்த (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்கான பணத்தை திறைசேரியிலிருந்து வழங்குமாறு அண்மையில் பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் கொடுப்பனவை இன்று (18 ஆம்) திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, 679,960 ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான 2,021 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.
இந்நிலையிலேயே, அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் தலைவர்கள் 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.