இஸ்ரேலின் (Israel) தாக்குதல் காரணமாக லெபனானில் (Lebanon) உயிரிழப்பு எண்ணிக்கை 3000ஐ நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் (Hamas) மற்றும் இஸ்ரேலிடையே கடந்த ஆண்டு முதல் தீவிரமான போர் நிலவி வருகிறது.
இந்த தாக்குதல்களினால் இதுவரையில் 40,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
பல லட்சம் மக்கள் உள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டனர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
லெபனானுடன் போர்
இதன் மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பலஸ்தீனத்துடனான போர் முடிந்துவிட்டது, இப்போது லெபனானுடன் போர் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
லெபனானில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலில் பொதுமக்களும் நூற்றுக்கணக்கில் இறந்துள்ளனர். மொத்தமாக இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 3000 நெருங்கியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் – ஹிஸ்புல்லா
ஹமாஸை வீழ்த்தவே ஓராண்டு ஆன நிலையில், ஹிஸ்புல்லாவை (Hezbollah) வீழ்த்த வேண்டும் எனில் நிச்சயம் நீண்ட நாட்களாகும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எவ்வளவு காலம் ஆனாலுமே கூட ஹிஸ்புல்லாவை வீழ்த்துவது ஓரளவுதான் சாத்தியம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் சர்வதேச நாடுகள் தலையிட்டு இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.