Home இலங்கை சமூகம் 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க திட்டம்

3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க திட்டம்

0

தற்போது 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், அவற்றை அடுத்த மூன்று மாதங்களில் அச்சிடப்பட்டு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் (Ministry of Transport, Highways, Ports, and Civil Aviation) ஆலோசனைக் குழுவில் பங்கேற்ற போதே அதிகாரிகள் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த ஆண்டு அச்சிடப்பட்டு வழங்கப்படும் என அமைச்சின் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

ஒரு மில்லியன் அட்டைகள்

சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடுவதற்கு தேவையான ஒரு மில்லியன் அட்டைகளை பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக அவர்கள் குழுவிற்கு அறிவித்தனர்.

காத்திருப்பு பட்டியலில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்காக, ஒவ்வொரு மாகாணத்திலும் அச்சு இயந்திரம் ஒன்றை நிறுவுமாறு குழுத் தலைவர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வாகன இலக்கத்தகடுகள் வழங்குவது தொடர்பாகவும் அவர் அதிகாரிகளிடம் விசாரித்தார்.

அதற்கு பதிலளித்த அதிகாரிகள், தற்போது விநியோகஸ்தர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை நடைபெற்று வருவதாகவும், அமைச்சரவை அங்கீகாரத்துடன் இந்த செயல்முறை முடிவடைந்த பின்னர் இலக்கத்தகடுகள் வழங்கும் செயல்முறையை ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version