நாட்டின் நான்கு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை, இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம், கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
