Home இலங்கை குற்றம் துபாயில் முகாமிட்டுள்ள இலங்கையின் 45 குற்றவாளிகள்

துபாயில் முகாமிட்டுள்ள இலங்கையின் 45 குற்றவாளிகள்

0

Courtesy: Sivaa Mayuri

இன்டர்போல் (Interpol) என்ற சர்வதேச பொலிஸரால் சிவப்பு பட்டியலிடப்பட்ட 45 இலங்கைக் குற்றவாளிகள் வெளிநாடுகளில், பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து இந்த நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட நாடு கடத்தல் உடன்படிக்கைகளின் அடிப்படையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 

சட்டவிரோதமான செயற்பாடுகள்

அத்துருகிரியவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், பிரபல குற்றவாளியான கஞ்சிபானை இம்ரான், துபாயில் பதுங்கியிருக்கும் லொகு பட்டி மற்றும் கோணக்கோவிலே சாந்த ஆகிய குற்றவாளிகளின் உதவியுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் வேளையில் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக ஆரம்பத்தில் துபாயில் தஞ்சம் புகுந்த பல தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தற்போது வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை அதிகாரிகள், டுபாய் அதிகாரிகளுடன் இணைந்து, சிவப்பு அறிவிப்புகளின் அடிப்படையில் சில இலங்கைக் குற்றவாளிகளை கைது செய்து, பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் அவர்களுடன் தொடர்புடைய ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையில் பல கொலைகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தேடப்பட்டு வந்த பாதாள உலக பிரமுகர்கள் இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) துபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர்களான நுகேகொடையைச் சேர்ந்த பபி என்ற 48 வயதான தினேஷ் சமந்த டி சில்வா மற்றும் 26 வயதான கங்கனமலாகே திமுத்து சதுரங்க பெரேரா என்றழைக்கப்படும் “சமித்புர சத்து” ஆகியோர்  இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

2024 பெப்ரவரி 15 அன்று, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் சலிந்து மல்ஷிகா என்றழைக்கப்படும் “குடு சலிந்து”வின் முதன்மை கூட்டாளியாக அடையாளம் காணப்பட்ட ஹப்புஆராச்சிகே டொன்பியும் துபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்த ஆண்டு மே மாதம், பிரபல பாதாள உலக பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ருவன் ஜெயசேகர என்றழைக்கப்படும் “மிடிகம ருவன்” மற்றும் பிரபல குற்றவாளியான ரமேஷ் மிஹிரங்க என்ற “மன்ன ரமேஷ்” ஆகியோர் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version