மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விதுசன் (21 வயது) என்ற தமிழ் இளைஞன், 2021 ஜூன் மாதம் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை கிழக்கு மாகாண குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றப்படவுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
விதுசனின் மரணம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விதுசனின் குடும்பம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகியிருந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கிலே பொலிஸாருடைய விசாரணைகளில் எந்தவிதமான முன்னேற்றகரமான நிலைமையும் இல்லாதிருப்பதை நீதிமன்றத்தினுடைய கவனத்துக்கு கொண்டு வந்து, இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்குமாறு விண்ணப்பம் செய்திருந்தோம் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
நீதிமன்றம் கடந்த தவணையிலேயே இது பற்றி சுயமாக ஆராய்ந்து, கிழக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினருடைய விசாரணைக்காக இந்த வழக்கை மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்ததாக அறியத் தந்திருக்கின்றார்கள்.
அந்த வகையில் எதிர்காலத்திலே இந்த வழக்கை கிழக்கு மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க இருக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்ட விதுஷனுடைய குடும்பத்தோடு சேர்ந்து நாங்களும் நீதிக்காக போராடுவோம், குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.
2021 ஜூன் 2ஆம் திகதி இரவு 10:30 மணியளவில் இருதயபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வைத்து, சிவில் உடையில் வந்த பொலிஸாரால் விதுசன் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அடுத்த நாள் (ஜூன் 3) அதிகாலையில் விதுசன் உயிரிழந்துவிட்டதாகக் குடும்பத்தினருக்குத் பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விதுசனின் குடும்பத்தினர் பொலிஸார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் பொலிஸார் தாக்கியதனால்தான் தமது மகன் உயிரிந்திருந்ததாக தெரிவித்து இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்து ஐந்துவருடகாலமாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
