கண்டி மாவட்டம், ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியில் “டிட்வா” புயலால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஐந்து கிராமங்கள் உடனடியாக மனிதர்கள் வசிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவி இயக்குநர் எல்.ஏ.கே.ரணவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மனித வாழ்வு
அந்த பகுதியில் பெரிய அளவிலான நிலப்பகுதிகள் கிட்டத்தட்ட 40 அடி ஆழத்திற்கு இடிந்து விழுந்ததால், அக்கிராமங்கள் மனித வாழ்வுக்கு பாதுகாப்பற்றவையாக மாறிவிட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
உடத்தாவ, நெலும் மாலை, கல நாக, மட கெலே மற்றும் உட கல் தெபொக்காவ ஆகிய ஐந்து கிராமங்கள் இவ்வாறு மனிதர்கள் வசிப்பதற்கு பொருத்தமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடத்தாவ கிராமத்தில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முழுமையாக புதைந்துள்ளன. இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும், பல உடல்கள் 30 முதல் 40 அடி ஆழத்தில் உள்ள இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால், காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என ரணவீர தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள்
பாதுகாப்பு காரணங்களால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தோண்டி மீட்புப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நிலச்சரிவு அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் மீள் குடியேற்றம் அனுமதிக்கப்பட மாட்டாது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் டொக்டர் அசிரி கருணவர்தன தெரிவித்துள்ளார்.
விரிவான மதிப்பீடுகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
மேம்பட்ட 3D தொழில்நுட்ப உதவியுடன் எதிர்கால நிலச்சரிவு ஆபத்துகளை மதிப்பீடு செய்ய நில அடையாளம் காணும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத புதையல் அகழ்வு போன்ற பல மனித செயற்பாடுகளினால் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
