செம்மணி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் 56 நாட்கள் அனுமதி உத்தரவுக்கு அமைய, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி செம்மணியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 51-ஆவது நாளான இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கெனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூடுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இதுவரை இடம்பெற்ற முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 105 நாள் அகழ்வுப் பணிகளின் முடிவில், 552 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 540 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
