Home இலங்கை சமூகம் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

கடந்த அரசாங்கத்தின் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு(Department of Immigration and Emigration) 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை  கொள்வனவு செய்வதற்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு கொள்வனவு தொடர்பான விலைமனு வழங்கப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி தனியார் நிறுவனமொன்று தாக்கல் செய்த மனு நேற்று(03) சீராக்கல் மனு ஊடாக அழைக்கப்பட்டது.

இதன்போதே போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

 இலத்திரனியல் கடவுச்சீட்டு

இந்த விசாரணை தொடர்பான கண்காணிப்புகளை சமர்ப்பிக்க அந்த குழு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிக்க திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, குறித்த கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதைத் தடுத்து நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்குமாறு தமது வாடிக்கையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிக்க திகதி ஒன்றை பெற்றுத்தருமாறு, பிரதிவாதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கமைய, இது தொடர்பான விசாரணையை ஜனவரி 23ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version