காவல்துறைக்கு 75,000 புதிய சுவாசப் பகுப்பாய்வு கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை பிரிவுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வீதி விபத்து விசாரணையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தட்டுப்பாடு நீக்கம்
கடந்த காலங்களில் நிலவிய சுவாசப் பகுப்பாய்வு கருவிகளுக்கான தட்டுப்பாடு இந்த புதிய தொகுதியின் மூலம் நீங்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வீதிச் சோதனைகள் மற்றும் விபத்து நடந்த இடங்களிலேயே உடனடி சோதனைகளை முன்னெடுக்க இது உதவும் என்றும் அவர் கூறினார்.
கருவிகள் இல்லாத சமயங்களில் என்ன நிகழும்
அத்துடன் “கருவிகள் இல்லாத சமயங்களில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று அர்த்தமல்ல.
அத்தகைய சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் சட்ட மருத்துவ அதிகாரி (JMO) ஒருவரிடம் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
அங்கு பெறப்படும் மருத்துவ அறிக்கையே நீதிமன்றத்தில் சாட்சியாகப் பயன்படுத்தப்படும்” என காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.
