திருகோணமலை – சேருவில பகுதிக்கு மாத்திரம் நிவாரணம் மற்றும் உதவி வழங்குவது அநீதியானது. மாறாக, பாதிக்கப்பட்ட முழு நாட்டு மக்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரணங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் அசமந்தப்போக்கு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தும் சுற்றுநிரூபங்களின்படி, நிவாரணம் வழங்கினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதமானவர்களுக்கு கூட உதவி கிடைக்காது. அரசாங்கம் உணர்வுபூர்வமாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் செயல்படுவது அவசியம்.
இதன்படி, கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர், பொலிஸார் மற்றும் விகாரைகள் மூலம் பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நிவாரணங்களை வழங்க வேண்டும்.
மேலும், மக்கள் வெறும் நிவாரணங்களை மாத்திரம் எதிர்ப்பார்க்கவில்லை. மாறாக, அவர்கள் இழந்தவற்றை கட்டியெழுப்பவும், தொழில்களை மீண்டும் ஆரம்பிக்கவும் தான் விரும்புகிறார்கள்.
மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடு சேதமடையாவிட்டாலும், அங்குள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான மறைமுக பாதிப்புக்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
