2019 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கருத்தடை தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளான வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனின் மகளான Zainab Shafi, 2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மருத்துவ பீடத்திற்கு நுழைய தகுதி பெற்றுள்ளார்.
சர்ச்சையின் போது குடும்பத்தினர் சந்தித்த கடுமையான பொது விமர்சனம் மற்றும் மன அழுத்தம் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தாலும், இந்த மாணவி தனியார் பரீட்சார்த்தியாக பரீட்சைக்கு தோற்றி விமர்சனங்களுக்கு தக்க பதில் வழங்கியுள்ளார்.
இவர் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவுக்கு தோற்றி 3 ‘ஏ’ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 12வது இடத்தையும் தேசிய ரீதியில் 357வது இடத்தையும் பெற்று, மருத்துவ பீடத்திற்கு நுழைய தகுதி பெற்றுள்ளார்.
மாணவியின் கனவு
முன்னதாக இவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையிலும் 9 ‘ஏ’ சித்திகளை பெற்று சிறந்து விளங்கியுள்ளதோடு, மக்களுக்கு சேவை செய்ய தனது தந்தையைப் போல மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இவரது தந்தையான வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனை, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்ற கடந்த வருடம் நவம்பர் மாதம் விடுவித்து தீர்ப்பளித்திருந்தது.
