புத்தளம் (Puttalam) – மதுரங்குளிய பகுதியில் உயிருடன் இருந்த நபரொருவரை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென்னந்தோப்பு காணியொன்றில் பணிபுரிந்து வந்த காவலர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக குறித்த காணியின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்போது காவலர், தென்னந்தோப்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் காணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து உயிரிழந்து விட்டதாக நம்பப்பட்ட நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், முறைப்பாட்டை செய்த காணி உரிமையாளர் வென்னப்புவ உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த நபர் உண்ணாமல் இருந்ததால் மயக்கமடைந்து தூங்கிவிட்டதாகவும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.