Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு குமுழமுனையில் நெல் சந்தையாக மாறிய கோவில்

முல்லைத்தீவு குமுழமுனையில் நெல் சந்தையாக மாறிய கோவில்

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு குமுழுமுனையில் உள்ள கொட்டுக் கிணற்று பிள்ளையார் கோவில் முன்றலில் நெல் கொள்வனவு நடைபெற்று வருகின்றது.

தண்ணிமுறிப்பு வயல் நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற் செய்கை அறுவடை நடைபெற்று வருகின்றது.

அறுவடையின் மூலம் பெறப்படும் சிறுபோக நெல்லினை குமுழமுனை கொட்டுக் கிணற்று பிள்ளையார் கோவில் முன்றலில் கொள்வனவாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.

நெல் விற்பனை

தண்ணிமுறிப்பு வயல் நிலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெற் செய்கையில் ஈடுபட்டு வந்த போதும் குமுழமுனை மக்களின் வயல் நிலங்கள் அதிகமாக இருக்கின்றது.

அத்தோடு அவர்களது கால்நடைகளை பராமரிக்கும் இடமாகவும் அவற்றுக்கான மேய்ச்சல் தளமாகவும் தண்ணிமுறிப்பு வயல் சார்ந்த நிலங்கள் இருக்கின்றன.

தண்ணி முறிப்பு வயல் நிலங்களுக்கு சென்று வரும் விவசாயிகள் கொட்டுக்கிணற்று பிள்ளையாரை வழிபட்டு செல்வது வழமையானது. அந்த விவசாயிகளுக்கும் குமுழமுனை தொட்டுக் கிணற்று விநாயகரும் அதிக நெருக்கமான தொடர்பு இருப்பதாக குமுழமுனையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.

இதனால் நெல் விற்பனையை கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோயில் முன்றலில் செய்து கொள்வதில் எல்லோரிடமும் நல்ல ஒத்திசைவு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சீரற்ற பாதையமைப்பு 

தண்ணிமுறிப்பு வயலுக்கு செல்லும் பாதைகளின் சீரின்மையால் பாரவூர்திகள் சென்று வருவதில் பாரியளவு இடர்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக குமுழமுனையில் இருந்து தண்ணி முறிப்பு குளம் வரையான பிரதான பாதை போக்கு வரத்துக்கு ஏற்றதாக இல்லை என தண்ணிமுறிப்பு விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தண்ணி முறிப்பு வயல் நிலங்களில் அறுவடையாகும் நெல்லினை கொட்டுக் கிணற்று பிள்ளையார் ஆலயம் வரை உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து கொள்வனவாளர்களிடம் கொடுக்க நேரிடுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோயில் முன்றல் நெல் விற்பனைக்கும் அதனை கொள்வனவுக்கும் வசதியாக இருப்பதாக களநிலையையை அவதானித்து உணர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version