வேலணை பிரதேச ஆளுகைக்குட்பட்ட தெருவோரங்களிலும் குடியிருப்பு
பகுதிகளுக்குள்ளும் கட்டாக்காலியாக திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவதற்கான
வலுவான பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என வேலணை பிரதேச சபையின்
உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (15) தவிசாளர் சிவலிங்கம்
அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறு விடயங்கள் குறித்து சபையில்
பிரஸ்தாபிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அவற்றுள் பல நடவடிக்கை மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில் கட்டாக்காலி விலங்குகளை கட்டுப்படுத்தும் முன்மொழிவை சபையில்
சமர்ப்பித்து கருத்துக் கூறுகையில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில்,
தற்போது பருவகால மழையுடன், பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள
நிலையில் கட்டாக்கலிகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை ஒவ்வொரு பிரதேச சபைகளும்
சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.
அதன் அடிப்படையில் எமது சபையும் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்து
கட்டாக்காலிகளால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவது அவசியம்.
இதேநேரம் கால்நடை வரையறைக்குள் கறவை மாடுகளை சுயதொழில் முயற்சியாக பலர்
குறிப்பாக பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அதுமடுமல்லாது எவரது பராமரிப்பும் இன்றி திரியும் மாடுகள் உள்ளிட்ட
உயிரினங்களும் அதிகளவில் தமது உணவு மற்றும் ஒதுங்கி நிற்கும் தேவைக்காக பரவலாக
திரிகின்றன.
கட்டுப்பாட்டு நடவடிக்கை
இவ்வாறான நிலையில் அனைவரது ஒத்துழைப்பும் இன்றி இந்த கட்டாக்காலிகளை
கட்டுப்படுத்துவதென்பதும் சவாலான விடயம்.
இவ்வாறு இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதனூடாக விவசாயப்
பயிர்கள், விபத்துகளைக் குறைத்தல், பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாத்தல்,
போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றுடன் விலங்குகளின் நலனையும் உறுதி
செய்ய முடியும்.
இதேவேளை நகர் மற்றும் வீதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளைச் சரியாக
அப்புறப்படுத்துவதன் மூலம், உணவு தேடி கால்நடைகள் வீதிகளுக்கு வருவதைக்
குறைக்க முடியும் என நம்புகின்றேன்.
எனவே குறித்த விடயத்தை தேவையின் அவசியம் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என
தெரிவித்தார்.
