மட்டக்களப்பில் தொல்லியல் நிலங்களின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டது கண்டனத்துக்குரிய செயற்பாடு என மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து பிரதேச சபை பகுதிகளில் உள்ள தொல்லியல் நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக நாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (24.11.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விகாரைகள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் விகாரைகள் சிலவையே காணப்படுகின்றன.
மேலும் தொல்லியல் விகாரைகளுக்கு இன்றைய நிலையில் எங்களுக்கு செல்லவும் முடியாது ஒன்றும் செய்யவும் முடியாத நிலையில் தான் இந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் உள்ள புராதன தொல்லியல் நிலங்களில் இன்றைய நிலையில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
அத்தோடு அடையாளப்படுத்தப்பட்ட தொல்லியல் நிலங்களின் பெயர்ப்பலகைகளும் அகற்றி விட்டால் இந்த இடங்களை அடையாளம் காண முடியாமல் போய்விடும்.
இதற்கு பிரதேசசபைகளில் அனுமதி பெறாததாலே அகற்றப்படுவதாக தெரிவிக்கும் நிலையில் தொல்லியல் திணைக்களத்தால் குறிப்பிட்ட நிறுவனங்களின் அனுமதி பெற்றே நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இவர்களின் அனுமதி பெற வேண்டும் என்றால் நாட்டிக்கு நடந்திருப்பதை என்னவென்று மக்களிடம் தான் கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
