தொல்பொருட் சான்றுகள் ஏறாளமாக கிடைக்கப்பெற்ற ஆனைக்கோட்டை அகழ்வாய்வு மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பமாகியுள்ளது.
1980ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி மற்றும் இந்திரபாலா ஆகியோர் முன்னெடுத்த தொல்பொருள் அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய பெருங்கற்கால பண்பாடு மையம் என உறுதிப்படுத்தும் வகையில் அடையாளப்படுத்தப்பட்ட தொல்பொருட் சான்றுகளே ஆனைக்கோட்டை அகழ்வாய்வு ஆகும்.
அகழ்வாராய்ச்சி பணிகள்
ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞான பூர்வமாக நிறுபிக்கக்கூடிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெறும் அகழ்வாராய்ச்சி பணிகள் புலம்பெயர் நிதிப்பங்களிப்புடனும், யாழ். மரபுரிமை மையத்தின் அனுசரணையுடன் அதன் தலைவர் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் இன்று (20.06.2024) ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில், தென்னிலங்கை தொல்லியல்துறை பேராசிரியரான நிமல் பெரேரா, மற்றும் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா, பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவஐயர், யாழ். பல்கலைக்கழக வரலாற்று துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்தினி அருளானந்தம், பேராதனை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஜே.ஜெயதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்களான சிவரூபி சஜிதரன்,தி.துளசிகா, தற்காலிக உதவி விரிவுரையாளர் திருச்செல்வம், யாழ். தொல்லியல் திணைக்கள அகழ்வாய்வுப் பொறுப்பதிகாரி வி.மணிமாறன், யாழ். கோட்டையின் நிலைய பொறுப்பதிகாரி பா.கபிலன், யாழ். தொல்லியல் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் லக்ஸ்மன் விக்ரமசிங்க, யாழ். மரபுரிமை மையத்தின் பொருளாளரும் யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட பதிவாளருமான இ.ரமேஷ் உறுப்பினர் வ.பார்த்திபன் மற்றும் முன்னாள் வலி தவிசாளர் அ.ஜெபநேசன் தொல்லியல் பட்டதாரிகளான க.கிரிகரன், ஜனனி ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக தொல்லியல்த்துறை நான்காம் வருட இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் மூன்றாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்கள் சமூக நலன்விரும்பிகள் எனப்பலரும் பங்குகொண்டுள்ளனர்.