Home இலங்கை குற்றம் இலங்கை மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம்

இலங்கை மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம்

0

இலங்கை மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் முதனிலை சைபர் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கி நிறுவனத்தினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக ஆக்ரோஷமான அச்சுறுத்தல் நிலவும் நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சைட்வைண்டர் என்ற சைபர் தாக்குதல் குழுவின் அச்சுறுத்தல் நிலவுவதாகவும், இதில் இலங்கை ஓர் முக்கிய இலக்குகளில் ஒன்றாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வியட்நாமின் டா நாங்கில் நடைபெற்ற கெஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு மாநாட்டில் இந்த அச்சுறுத்தல் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இலங்கை உட்பட பல நாடுகளை இலக்காக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச இரகசியங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இலக்கு வைத்து இந்த குழுக்கள் சைபர் தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சைட்வைண்டர் மற்றும் பிற அச்சுறுத்தல் குழுக்கள் எவ்வாறு அரசு ரகசியங்கள், இராணுவ உளவுத்துறை, மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை தொடர்ந்து இலக்காக்குகின்றன என்பது குறித்து காஸ்பர்ஸ்கியின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு குழு  தலைமை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் நவ்ஷின் ஷபாப் விளக்கியுள்ளார்.

சைட்வைண்டரின் செயல்பாடுகள் தொடர்ந்து அரசு, இராணுவம், மற்றும் இராஜதந்திர நிறுவனங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுவதாக எச்சரித்துள்ளார்.

பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம், சீனா, இந்தியா, மாலத்தீவு, நேபாளம், மியான்மர், இந்தோனேசியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னஞ்சல்கள் மூலம் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதல்கள் தகவல்களை திரட்டும் நோக்கிலானது அல்ல எனவும் புவிசார் அரசியல் காரணிகளையும் அரச இரகசியங்களை கைப்பற்றும் நோக்கிலும் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version