உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வடமேல் மாகாண ஊடவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநாகல் மாநகரில் விழிப்புணர்வு பேரணியொன்று நடைபெற்றது
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் 01ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தினம் கருபொருளாக ‘சரியான பாதையில் செல்லுங்கள்: எனது ஆரோக்கியம், எனது உரிமை’ என்பதாகும்.
இதற்கிடையே இவ்வருடத்தின் கடந்த ஆறுமாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 405 எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளனர்.
அறிவுறுத்துவோம், விழிப்புணர்வு பெறுவோம்
கடந்த வருடத்தில் இலங்கையில் கண்டறியப்பட்ட 105 எயிட்ஸ் நோயாளிகளில் 15 வீதமானவர்கள் இளம் பராயத்தினர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் சில நாட்களுக்கு முன்னர் சுகாதாரப் பிரிவின் அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்திருந்தது.
அதனையடுத்து உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு அறிவுறுத்துவோம், விழிப்புணர்வு பெறுவோம் எனும் தொனிப்பொருளில் வடமேல் மாகாண ஊடகவியலாளர் சங்கம் , எயிட்ஸ் விழிப்புணர்வுப் பேரணியொன்றை ஒழுங்கு செய்திருந்தது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க குருநாகல் கிளை, குருநாகல் பௌத்த வாலிப சம்மேளனம் என்பவற்றுடன் இணைந்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள், இளம் பராயத்தினர் மத்தியில் பரவலாக ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
கடந்த சனிக்கிழமை (30) காலை குருநாகல் நகர நீதிமன்ற வளாகத்தின் அருகில் இருந்து விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பமாகி குருநாகல் நகர கடிகாரச் சுற்றுவட்டம், சுரங்கப் பாதை, பொலிஸ் நிலையம், பிரதான வீதி ஊடாக குருநாகல் பொதுச்சந்தைக்கு அருகே வரை சென்று குருநாகல் பௌத்த வாலிப சம்மேளனம் அருகே பேரணி நிறைவுற்றது.
இதன்போது எச்.ஐ.வி. தொற்று தொடர்பான அறிவித்தல்கள், எச்.ஐ.வி.இ எயிட்ஸ் தொடர்பான பல்வேறு விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பொல்கஹவலை அல் இர்பான வித்தியாயலம், சியம்பளாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை, தெலியாகொன்ன ஹிஸ்புல்லா மத்திய கல்லூரி, பொல்கஹவலை தமிழ் வித்தியாலயம் என்பவற்றின் ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் பங்களித்திருந்திருந்தனர்.
வடமேல் மாகாண ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஜனூர் கிச்சிலான், செயலாளர் ஆனந்த, நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஆர்.எப்.அஷ்ரப் அலீ, செஞ்சிலுவைச் சங்க குருநாகல் கிளை தலைவர் பீ.எம்.பி. சிரிசேன, கிளை நிறைவேற்று அலுவலர் நிலங்கா அபேரத்ன, செயற்திட்ட அதிகாரி குசும் ஹேரத், குருநாகல் பௌத்த வாலிப சம்மேளன போசகர் நிமல் ஏக்கநாயக்க, பொருளாளர் எம்.எஸ்.கே. விஜேநாயக்க, நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் விஜேரத்ன, பொல்கஹவலை தமிழ் வித்தியாலய ஆசிரியை ஷர்மிலா ரளீம் ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருந்தனர்.