தனியார் பேருந்துகளில் (Private Bus) இருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா வரையான தொகை கப்பமாக அறவிடப்படுவதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன, கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஒரு கோடி ரூபா வரையான தொகை
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் செயற்பட்ட நேரக் கண்காணிப்பாளர்கள் நூறு ரூபா அல்லது இரு நூறு ரூபா வரையான தொகையையே கப்பமாக அறவிட்டார்கள்.
இப்போது அந்தத் தொகை ஐநூறு ரூபா அல்லது ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.
பேருந்து நிலையங்களுக்கு வெளியில் நிற்கும் சிலரும் தனியார் பேருந்துகளில் இருந்து கப்பம் அறவிடுகின்றனர்.
அதேபோன்று சில இடங்களில் காலையில் ஒருவரும், மாலையில் இன்னொருவருமாக இருப்பதால் ஒரே இடத்தில் இரண்டு பேருக்கு கப்பம் கொடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறாக நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா வரையான தொகை தனியார் பேருந்துகளில் இருந்து கப்பமாக அறவிடப்படுவதோடு, தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு இதற்கொரு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கெமுணு விஜேரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.