Home இலங்கை குற்றம் அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

0

 அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடையில் இன்று (04) மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை குறிவைத்து காரில் வந்த ஒரு குழு துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து அஹுங்கல்ல பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கரந்தெனிய-எகொடவெல சந்தியில் சந்தேகநபர்களால் கைவிடப்பட்ட நிலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அம்பலாங்கொடை, போரம்ப பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய தொழிலதிபர் உயிரிழந்திருந்தார்.

பணமோசடி வழக்கு

இவர் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அம்பலாங்கொடை நகரசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘கரந்தெனிய சுத்தா’ என்ற குற்றவாளியின் மைத்துனர் இவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணமோசடி வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இவர் மோதரை தேவாலாயக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபரான இந்த நபரின் கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தென் மாகாண மூத்த டி.ஐ.ஜி கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version