அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக
மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய
அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த
பியதிஸ்ஸ தலைமையில் இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட பிரேரணை
இந்நிகழ்வில் அம்பாறை,
மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன்
பிடிக்கப்படுவதால், அந்த கடற்தொழிலாளர்களின் மீன் அறுவடையை ஆழ்கடலில் களவெடுப்பதற்கு
அமைய, விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இது தொடர்பாக பேசி, இம்மீன்
கொள்ளையை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி
குழு கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இந்த பிரேரணை ஆராயப்பட்டு, அது
தொடர்பாக அறிக்கை ஒன்றினை உடனடியாக ஜனாதிபதிக்கும் மீன்பிடி அமைச்சிற்கும்
அதுபோன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மீன் கொள்ளை தொடர்பாக விரைவாக
நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானமும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் பெறப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, நாடாளுமன்ற
உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி
நிசாம் காரியப்பர், மு.கா. பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹிர்,
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல
சுகத் ரத்நாயக, பிரியந்த விஜயரத்ன, ஏ.எம்.எம்.ரத்வத்த மற்றும் திணைக்கள
தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கற் தடைகளை ஏற்படுத்துவதற்காக வேலைத்திட்டம்
அத்துடன் கடற்தொழிலாளர்களின் மற்றுமொரு
பிரச்சினையான கடல் அரிப்பு தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ஸ்தலத்திற்கு விஜயம் செய்ததோடு கல்முனை
பிரதேசத்தில் உள்ள கடலரிப்புக்குள்ளான பிரதேசங்களில் உடனடியாக கடல் அரிப்பைத்
தடுப்பதற்கான கற் தடைகளை ஏற்படுத்துவதற்காக வேலைத்திட்டத்தை உடனடியாக
ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிகழ்வில்
கரையோரப் பாதுகாப்பு திணைக்களப் பொறியியலாளர் துளசிதாசன் மற்றும் கரையோரப்
பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டதோடு கடற்தொழிலாளர்களும் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினருடன் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
