Home இலங்கை சமூகம் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் “கழுமரம்” தெருவெளி நாடகம்

போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் “கழுமரம்” தெருவெளி நாடகம்

0

போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் “கழுமரம்” தெருவெளி அரங்க ஆற்றுகை நிகழ்ச்சி திட்டமானது பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணத்தில் (Jaffna) JMFOA அமைப்பின் ஒன்று கூடல் நிகழ்வில் பங்கு கொண்டிருந்த நூற்றுக்கணக்கான சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் முன்னிலையில் கழுமரம் ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.

சமூக மாற்றத்தில் அரங்கச் செயற்பாட்டின் வலிமையை உணர்ந்து மேலும் இத்திட்டத்தை தாயகப் பிரதேசங்களில் விரிவாக்கி நடைமுறைப்படுத்தும் நோக்கத்தோடு குறித்த நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள்

தாயக பிரதேசங்களில் அதிகரித்து வரும் சட்ட விரோத போதைப் பொருள் பாவனையினால் நமது இளைய சமூகம் சீர்கெட்டு வருவது கண்டு பலரும் அண்மைக்காலமாக விசனம் தெரிவித்து வருகின்ற நிலையில், போதையற்ற சமூகத்தை கட்டமைக்கும் சமூக விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் ஒரு பிரதான செயற்பாடாக “கழுமரம்” தெருவெளி அரங்க ஆற்றுகை நிகழ்ச்சி திட்டம் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரையிலும் 86 இற்கும் மேற்பட்ட ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதுடன் ஏறத்தாழ 15000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை நேரடியாக பொது வெளிகளில் எதிர்கொண்டு ஆற்றுகை பல ஆரோக்கியமான அறிவுபூர்வமான கலந்துரையாடல்களையும் பின்னூட்டங்களையும் செயல்முனைப்புக்கான தூண்டல்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

கலந்துரையாடல்கள்

அவுஸ்திரேலியா வாழ் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட வைத்தியர்கள் சங்கத்தின் (JMFOA) நிதி அனுசரணையோடு, கிளிநொச்சி (kilinochchi) மாவட்ட செயலகம், கிளிநொச்சி வைத்தியர் சங்கம், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களினதும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் சுயாதீன அரங்கச் செயலாளிகளாக ஒன்றிணைந்து ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டமானது தற்போது அரங்காலயா சுதந்திர அரங்க வலையமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அரங்காலயா சுதந்திர அரங்க வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் நாடகத்தின் இயக்குனருமான அ.சத்தியானந்தன் (A. Sathyanandan) கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  “கழுமரம் “அரங்கச் செயற்பாட்டின் போது நடைபெறும் கலந்துரையாடல்கள், விவாதங்களில் செயல்முனைப்புடன் பங்குகொண்ட இளையவர்கள் இதனை ஒரு சமூக உரையாடலாக, மாற்றத்தை நோக்கி நகர்த்தி வருகின்றனர் என்றும் ஆற்றுகைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போதைப் பாவனை

பொதுவெளியில் மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி தங்கள் உள்ளக் கிடைக்கைகளை உணர்ச்சித்ததும்ப இவ்வரங்குகளில் வெளிப்படுத்துகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உறவுகள் கண்ணீர் மல்கி உருகுகின்றார்கள் அத்தோடு பாதிக்கப்பட்ட இளையவர்கள் பலர் அதிலிருந்து மீள வழி தேடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான போதைப் பாவனைக்கு எதிரான எண்ணக்கருவை மக்களிடத்தில் ஏற்படுத்த வல்ல சிறந்த ஊடகமாக மற்றும் கருவியாக அரங்கக் கலையைப் பயன்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம்.

அரங்க நடவடிக்கைகளின் ஊடாக மக்களை நெருங்கவும் அவர்களின் மன வெளிப்பாட்டைத் தூண்டவும் போதைப் பாவனைக்கு எதிரான குரலாக அவர்களை ஒன்றிணைக்கவும் அரங்கச் செயற்பாட்டாளர்கள் ஆகிய எங்களால் முடிகின்றது என நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version