Home இலங்கை சமூகம் ஆனைக்கோட்டை சித்த மருந்தக வைத்தியர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

ஆனைக்கோட்டை சித்த மருந்தக வைத்தியர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

0

வலிகாமம் – தென்மேற்கு பிரதேச சபையினால் நடாத்தப்படும் ஆனைக்கோட்டையில் உள்ள
சித்த மருந்தகத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவர் தொடர்பாக பல்வேறு
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கருகம்பனையில் உள்ள சித்த வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த காலத்தில்
பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த
ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி ஆனைக்கோட்டை மருந்தகத்துக்கு இடமாற்றம் பெற்று
வந்துள்ளார்.

அந்தவகையில் குறித்த வைத்தியரை தேடி 35 வயதுடைய நபர் ஒருவர் அடிக்கடி
மருந்தகத்துக்கு வருவதாகவும், இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படுவதாகவும்
தெரியவருகிறது. இருவரும் மருந்தகத்தின் உள்ளேயும் கைகலப்பிலும்
ஈடுபட்டுள்ளனர்.

முறைப்பாடு 

இது குறித்து 119 என்ற அவசர பொலிஸ் சேவைக்கும் தகவல் வழங்கிய
நிலையில் மானிப்பாய் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

பிறிதொரு நாள் குறித்த நபர் வைத்தியரின் கைபேசியை பறித்துச் சென்றபோது
வைத்தியர் அவரை துரத்தியபடி சென்றுள்ளார். இதன்போது இருவருக்குமிடையே வீதியில்
வைத்தும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர்
மருந்தகத்தின் உள்ளேயும் வந்து அமர்ந்திருப்பதும், இருவரும் சந்தோஷமாக பேசிப்
பழகும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் மருந்தகத்துக்கு செல்லும் மக்கள் பல்வேறு
அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் குறித்த வைத்தியர் உரிய நேரத்துக்கு மருந்தகத்துக்கு செல்வதும்
கிடையாது.

இதனால் வருகின்ற நோயாளிகள் காத்திருப்பதும், திரும்பிச் செல்வதும்
தொடர்கதையாக உள்ளது. மருந்தகம் கடமை நேரம் மு.ப 8.30 தொடக்கம் நண்பகல் 12.00
மணிவரை. பின்னர் பி.ப 2.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணிவரை ஆகும்.

அதிகாரிகளின் அசமந்த போக்கு 

இந்நிலையில்
இன்றையதினமும் மருந்தகத்துக்கு வருகை தந்த நோயாளிகள் அங்கு காத்திருந்தவேளை
3.00 மணிக்கே குறித்த வைத்தியர் வந்ததாக அறியமுடிகிறது.

இந்த பிரச்சினைகள் அனைத்தும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளருக்கும், செயலாளருக்கும் தெரிந்திருந்தும் அவர்கள் இதுகுறித்து
பாரா முகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இன்றையதினம் நோயாளி ஒருவர் மருந்தகத்துக்கு வந்து நீண்ட நேரம்
காத்திருந்துவிட்டு பொறுமையிழந்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளருக்கு விடயத்தை தொலைபேசி மூலம் தெரியப்படுத்திய நிலையில் “எத்தனை மணிக்கு
வந்தீர்கள்? வைத்தியர் வரும்வரை காத்திருங்கள். எங்களது வேலை எங்களுக்கு
தெரியும்” என அதிகார தொனியில் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தை பெறும் அதிகாரிகள் அவர்களுக்கு சிறந்த சேவையை
வழங்காமல் அவர்களை மிரட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது மக்கள்
மத்தியில் விசனத்தை ஏற்படுத்துகிறது. ஊழலை ஒழிப்பதாக ஆட்சிக்கு வந்த அநுர அரசு
இந்த நிலைக்கு என்ன பதிலை கூறப்போகிறது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே உரிய தரப்பினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமஸ் என கோரப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version