யாழில் ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இநத விஜயமானது இன்று(13.12.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த குழுவானது, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்புகளில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.
திடீர் சுகவீனம்
இதேவேளை, சுகவீனம் அடைந்த 58 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் திடீர் சுகவீனம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரும் அதில் உள்ளடங்குவதாக வைத்தியர் சமன் பத்திரன கூறியுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களில் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.