Courtesy: Sivaa Mayuri
என்டிபயோட்டிக் (Antibiotic) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தேவையற்ற மற்றும் தவறான பயன்பாடு, மனித உடலுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கும் என்பதுடன் அவை மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பில், தமது கருத்தை இலங்கை சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த அத்தபத்து வெளியிட்டுள்ளார்.
என்டிபயோடிக் சிகிச்சையின் ஆரம்பம்
என்டிபயோடிக் எதிர்ப்பு என்பது நுண்ணுயிரிகளான பக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்ட மருந்துகளின் செயல்திறன் குறைந்து வருவதைக் குறிக்கிறது.
இந்த மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, நுண்ணுயிரிகள் எதிர்ப்பை வளர்த்து, மருந்துகளை பயனற்றதாக்கி, ஆரோக்கிய சவால்களை அதிகமாக்கின்றன.
1928 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பென்சிலின் என்ற முதல் என்டிபயோடிக், என்டிபயோடிக் சிகிச்சையின் ஆரம்பத்தை குறிப்பதாக அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.
அப்போதிருந்து, பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக செலவுகள் காரணமாக , அவற்றின் உற்பத்தியில் முன்னேற்றம் கணிசமாக குறைந்தது.
2017 மற்றும் 2023 க்கு இடையில் 10 புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.
இதற்கிடையில், நுண்ணுயிரியல் சிறப்பு மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் சுஜாதா பத்திரகே, என்டிபயோடிக்கின் அபாயகரமான போக்கை எடுத்துக்காட்டியுள்ளதோடு, என்டிபயோடிக் பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும், தவறான பயன்பாட்டைத் தடுப்பதில் மருத்துவ நிபுணர்களின் பங்கையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருந்துகளின் பக்க விளைவுகள்
எல்லா நோய்களுக்கும் மருந்து தேவைப்படாது. அவற்றுக்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன.
எனினும் துரதிஸ்டவசமாக, விரைவான மீட்புக்கான முயற்சியில் பலர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தவறாகப் பயன்படுத்துகின்றனர்
எனவே மருந்துகளின் சாத்தியமான பக்க விளைவுகளை கருத்தில் கொள்ளுமாறு அவர் நோயாளிகளை வலியுறுத்தியுள்ளார்.
மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு உட்பட, மருந்தை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களை நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம், நோயாளிகள் உடனடி நிவாரணம் கோரும் நிலையிலும், முறையான அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டிய கடமை மருத்துவர்களுக்கும் உண்டு என்று நுண்ணுயிரியல் சிறப்பு மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் சுஜாதா பத்திரகே சுட்டிக்காட்டியுள்ளார்.