ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) பொது அமைதியை பேணுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிட்டமை மனித உரிமை ஆர்வலர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்(Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் உள்ள இந்த நடைமுறை, தொடர்ந்து வந்த அரசாங்கங்களாலும் பின்பற்றப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முடிவு குறித்து அதிருப்தி
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன்(Ambika Satkunanathan) சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், ஜனாதிபதியின் இந்த முடிவு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
@AKD100Days
Deeply disappointing that Prez @anuradisanayake has (mis)used Sec 12 of the Public Security Ordinance to call out the armed forces to maintain public order. This is unnecessary and is a continuation of the militarization of policing. @Dr_HariniA pic.twitter.com/x8PCQExP1m
— Ambika Satkunanathan (@ambikasat) September 27, 2024
அத்துடன் அவர் இந்த நடவடிக்கையை விமர்சித்தார். பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகளை அழைக்கும் முடிவு தேவையற்றது மற்றும் இது இராணுவமயமாக்கலின் தொடர்ச்சி எனவும் குறிப்பிட்டார்.
சட்டப்பிரிவு 12 என்பது நாடாளுமன்ற அனுமதியின்றி ஒரு பகுதியான அவசரகால நிலையைப் பேணுவதற்கும், ” நிலைமையை” இயல்பாக்குவதற்கும் மற்றும் நிறைவேற்று அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிப்பதற்கும் ஒரு பொறிமுறையாகும் என்று சற்குணநாதன் மேலும் விரிவாகக் கூறினார். எனவே இந்த வர்த்தமானியை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் இது அவசியம்
எவ்வாறாயினும், பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், பொதுப் பாதுகாப்பைப் பேணுவது அவசியம் என்று வாதிடும் சில சமூக ஊடக பயனர்களிடமிருந்து இந்த முடிவு ஆதரவைப் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ராணுவத்தை நிலைநிறுத்துவது நிறுத்தப்படலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
நேற்று(27) வெளியிடப்பட்ட வர்த்தமானியில், இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அண்டிய கடல் பகுதியில் பொது பாதுகாப்பை பேணுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.