சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான விடயத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்சர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என நாமல் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ”எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை இலக்கு வைத்து குறிப்பாக எமது கட்சியின் உறுப்பினர்களை இலக்கு வைத்து அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.
போதைப்பொருள் விவகாரம்
அண்மையில் தெற்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கமும் இதனை தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த கொள்கலன்கள் சுங்கத்தில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து ஒன்றும் விழவில்லை. ஆகவே இந்த கொள்கலன் விடுப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொல்வது உண்மையா, காவல்துறைமா அதிபர் சொல்வது உண்மையா என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
குற்றஞ்சாட்டிய அரசாங்கம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கும், ராஜபக்சர்களுக்கும் தொடர்புண்டு என்று அரசாங்கம் தேர்தல் மேடைகளில் குற்றஞ்சாட்டியது. ஆனால் இதுவரையில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
தற்போது போதைப்பொருள் விவகாரத்துக்கும் ராஜபக்சர்களுக்கும் தொடர்புண்டு என்று குறிப்பிடப்படுகிறது. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை போன்று அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
