Home இலங்கை அரசியல் புத்தர் சிலை நிறுவப்பட்ட இடத்தில் பௌத்த விஹாரை இருக்கவி்ல்லை

புத்தர் சிலை நிறுவப்பட்ட இடத்தில் பௌத்த விஹாரை இருக்கவி்ல்லை

0

திருகோணமலையில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை இருக்கவில்லை எனவும்,  இதனை விஹாரை எனக் கூறினாலும் அண்மைக் காலம் வரையில் இந்த இடத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றே காணப்பட்டது எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட இடத்திற்கு 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில் மத வழிபாட்டு தலத்திற்கான ஓர் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அண்மைக்காலம் வரையில் குறித்த இடம் மத வழிபாட்டு தலமாக பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக அந்த இடம் ஓர் சிற்றுண்டிச்சாலையாகவே காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் இந்த சிற்றுண்டிச் சாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு பகுதி கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலேயே இந்த முரண்பாட்டு நிலை நீடித்து வந்தது எனவும் இதன் அடிப்படையில் குறித்த சிற்றுண்டிச்சாலையின் சட்ட விரோத கட்டுமானங்களை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் உத்தரவு இட்டிருந்தார்.

இந்த உத்தரவு தொடர்பில் பௌத்த வழிபாட்டுத்தல தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

பின்னர் இந்த குறித்த காணிக்கு பொறுப்பான பௌத்த மாநாயக்க தேரர் கட்டிடத்தை அகற்றுவதை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்குமாறு கோரி இருந்தார்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டது அந்த ஒரு வார கால அவகாசம் மேல்முறையீடு செய்யும் நோக்கில் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த ஒரு வார கால அவகாசம் கடந்த 14ஆம் திகதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் 16ஆம் திகதியே இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

புத்தர் சிலையை அகற்றுவது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது, சட்டவிரோதமாக நிர்மானிக்கப்பட்ட கட்டுமானங்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் பௌத்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படும் என்ற காரணத்தினால் அந்த சிலை அகற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது.

பின்னர் பொலிஸாருக்கும் குறிப்பிட்ட தரப்பினருக்கும் ஏற்படக்கூடிய மோதலை தவிர்க்க மீண்டும் அந்த சிலை வைக்கப்பட்ட இடத்திலேயே வைத்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version