யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) நாடாளுமன்றில் தான் தெரிவித்த கருத்துக்கு கண்டி மாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான இராமநாதன் அர்ச்சுனா நேற்று (24.12.2025) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அர்ச்சுனா
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சமகால அநுர அரசாங்கம் இன்னும் சிறிது காலம்தான் ஆட்சியில் இருக்கும் என தலதா மாளிகையின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்ததாக கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நான் தெரிவித்திருந்தேன்.
ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை. இந்த அரசாங்கத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல எனது பங்களிப்பை வழங்குமாறும், உங்களை போன்று உண்மை பேசுபவர்களே எமது நாட்டுக்கு தேவை என குறிப்பிட்டனர்.
ஆனால் மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்கின்றனர் என்ற கருத்தில் அவர்களையும் சேர்த்ததற்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் சொல்லாததை நாடாளுமன்றத்தில் கூறியதாக அர்த்தமாகிவிடும்“ என்று குறிப்பிட்டிருந்தார்.
