ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ், தன்னிச்சையான தடுப்புக்காவல்,
சித்திரவதை மற்றும் காவலில் உள்ள மரணங்கள் உள்ளிட்ட வேரூன்றிய மற்றும் முறையான
உரிமை மீறல்களை இலங்கை குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின்
அறிக்கை, விபரிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க்கின் புதிய அறிக்கை, நீதிக்காகப்
போராடும் குடும்பங்கள் மற்றும் ஆர்வலர்களை மௌனமாக்குவதற்கு கொடூரமான சட்டங்களை
தவறாகப் பயன்படுத்துவதையும் விபரிக்கிறது.
சர்வதேச ஈடுபாடு
எனவே மனித உரிமைகள் பேரவையின் மூலம் தொடர்ச்சியான சர்வதேச ஈடுபாடு அவசியமானது
என்றும் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
2025 செப்டெம்பர் 8ஆம் திகதி அன்று ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது
அமர்வில் இலங்கை மீதான தற்போதைய ஆணைகளை புதுப்பிக்க வேண்டும் என்றும்
கண்காணிப்பகம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அறிக்கையிடல்
2021 முதல், இலங்கையில் மனித உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கையிடலை
பேரவை கட்டாயப்படுத்தி வருகிறது அத்துடன், கடுமையான குற்றங்களின் தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கவும்,
பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் சபை இலங்கை
பொறுப்புக்கூறல் திட்டத்தையும் நிறுவியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் கண்டுபிடிக்கப்படும் புதைகுழிகளை சர்வதேச
நியமங்களுக்கு ஏற்ப தோண்டுவதற்கு போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப
வளங்களை உறுதி செய்வதற்கு அரசாங்கம் சர்வதேச ஆதரவை நாட வேண்டும் என்று மனித
உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
