Home இலங்கை IRIS Dena மீதான தாக்குதல் ஒரு போர்க்குற்றம் – அமெரிக்காவே பொறுப்பு : ஈரான் குற்றச்சாட்டு

IRIS Dena மீதான தாக்குதல் ஒரு போர்க்குற்றம் – அமெரிக்காவே பொறுப்பு : ஈரான் குற்றச்சாட்டு

0

இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பால் ‘ஐரிஸ் டேனா’ கப்பல் மீது நடத்தப்பட்ட
தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என ஈரான் பகிரங்கமாகக்
குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி மற்றும் இலங்கையின்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் நேற்று(23.04.2026) இடம்பெற்ற தொலைபேசி
உரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பதற்ற நிலை

இந்தத் தாக்குதலை “முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்” என வர்ணித்த அமைச்சர்
அராக்சி, இது ஜெனிவா உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை
அப்பட்டமாக மீறும் செயல் என்றும் கடுமையாகச் சாடினார்.

இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த
தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் ஈரான் முன்னெடுக்கும்
என்றும் அவர் உறுதியளித்தார்.

தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கும், உயிரிழந்தவர்களின்
சடலங்களை மீண்டும் ஈரானுக்கு அனுப்பி வைப்பதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட
துரித நடவடிக்கைகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது நன்றிகளைத்
தெரிவித்துக்கொண்டார்.

மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்துக் கவலை வெளியிட்ட அவர்,
இந்தத் தாக்குதல் சம்பவம் ஈரானிய மக்களின் நினைவில் நீங்காத வடுவாக இருக்கும்
என்றும் குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான சூழலிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை
மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் ஆக்கபூர்வமான
கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

Source: https://tamilwin.com/article/attack-on-iris-dena-is-a-war-crime-iran-alleges-1776988184

NO COMMENTS

Exit mobile version