கிளிநொச்சி மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கர்ப்பிணி
தாய்மார் ஆகியோரின் போசாக்கு மற்றும் சுகாதார நலன்களை கருத்தில் கொண்டு
அனைத்து உத்தியோகத்தர்களும் பணியாற்ற வேண்டும் என மாவட்ட அரச அதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று(10-12-2025) நடைபெற்றபோது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மாவட்ட ரீதியில் மகளீர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால
நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக
ஆராயப்பட்டன.
வாழ்வாதார உதவிகள்
மேலும் நிலைசார் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள், வாழ்வாதார உதவிகள்,
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வுகள், தேவையான உதவிகள், துறைசார்ந்து
பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் போன்ற பல்வேறு
விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், உதவித்
திட்டமிடல் பணிப்பாளர், உதவிப் பதிவாளர், மாவட்ட தாய் சேய் நல வைத்தியர்,
முன்பள்ளி உதவிப் பணிப்பாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலகம்
மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் – பெண்கள் பிரிவுகளின்
உத்தியோகத்தர்கள், நன்நடத்தை உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள்,
துறைசார்ந்து பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட
பலரும் கலந்து கொண்டனர்.
