வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மட்டக்களப்பில் இருந்து பாவற்கொடிச்சேனைக்கு செல்லும் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் சாரதியின் மரியாதை குறைவான வார்த்தைகளால் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(04.09.2025) மாலை நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் கைப்பை மற்றும் தான் கொண்டு வந்த தலைக்கவசத்துடன் பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்போது பேருந்தின் முன்கதவு அருகில் நின்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை பின்னால் செல்லுமாறு சாரதி கூறியுள்ளார்.
இதன்போது, தனக்கு காலில் பிரச்சினை இருப்பதால் நெருக்கி நிற்க முடியாது என கூறிய பெண்ணை, கால் இயலவில்லை என்றால் இறங்கி செல்லுமாறு மரியாதை குறைவாக சாரதி கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண் இறங்க முயற்சித்த போதும் சன நெருக்கடி காரணமாக அவரால் இறங்க முடியவில்லை.
அந்தளவு சன நெருக்கடியில் பேருந்து சரிந்தது போல பயணித்தாலும் மீண்டும் மீண்டும் தரிப்பிடங்களில் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது, பின் கதவு அருகில் இருந்த சிறுமி ஒருவருக்கு மூச்சு திணறி வலிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்
இறுதியாக, பாதிக்கப்பட்ட பெண், தனது கைப்பையையும் தலைக்கவசத்தையும் ஜன்னல் வழியாக வெளியே இருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு அவரும் கீழே இறங்கியுள்ளார்.
இதன் பின்னர், ‘இடமில்லாத பேருந்தில் இன்னும் எதற்காக பயணிகளை ஏற்றுகின்றீர்கள்?’ என குறித்த பெண், சாரதியை பார்த்து சத்தமிட, ‘நான் நிறுத்தினால் இவர்களை யார் ஏற சொன்னது?’ என மீண்டும் தரக்குறைவாக சாரதி பதிலளித்துள்ளார்.
மேலும், அப்போது ஏறிய பயணிகளும் இந்த பேருந்தை விட்டால் வீடு செல்ல முடியாது என கூறிக்கொண்டே ஏறியுள்ளனர்.
வெளியே சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணின், காற்சட்டையின் ஒரு பகுதி கிழிந்திருந்ததுடன் அவரின் 8,000 ரூபா பெறுமதியான மூக்குக்கண்ணாடியும் உடைந்துள்ளது.
அத்துடன், அவரது தலைக்கவசத்தை கண்ணாடியும் உடைந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/AyHrH58fymk
