Home முக்கியச் செய்திகள் கொழும்பில் மோசமான நிலை: வெள்ள நீர் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

கொழும்பில் மோசமான நிலை: வெள்ள நீர் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

0

தலைநகர் கொழும்பில் சில பிரதேசங்களில் தற்போது நிலவி வரக்கூடிய வெள்ள நீரானது நாளைய தினம் (01.12.2025) மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்தும் பெய்து வந்த மழையுடனான வானிலை தற்போது சீரான நிலைக்கு திரும்பியுள்ளது.

எனினும், தொடர் மழையால் ஏற்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்கள் இன்னும் ஓய்வடைந்ததாக இல்லை.

தொடர் மண்சரிவு

மத்திய மலைநாட்டில் தொடர் மண்சரிவுகள் பதிவாகி வரும் நிலையில், தலைநகர் கொழும்பில் வெள்ள நீர் நிரம்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

களனி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ள காரணத்தினால் கொழும்பின் நாகலாகம் வீதி, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் நாகலாகம் வீதியில் தற்போது நீர்மட்டமானது 7.4 அடியாக காணப்படும் நிலையில், இந்த நீர்மட்டமானது நாளைய தினம் (01.12.2025) மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்மட்டம்

நேற்றைய தினம் (29.11.2025) மத்திய மலைநாட்டின் காசல்ரீ, லக்ஷபான மற்றும் மவுஸ்ஸாகலை நீர்தேக்கங்கள் திறந்து விடப்பட்டதன் காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தது.

இதன்காரணமாக, நேற்று (29.11.2025) இரவு வேளையில் திடீரென கொழும்பின் சில பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. 

இவ்வாறான பின்னணியில், ஹங்வெல்ல பகுதியில் தற்போது நிரம்பியுள்ள வெள்ள நீரானது தற்போது கொழும்பு நோக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதாவது, கொழும்பின் உயர் நீர்மட்டம் வழக்கமாக ஹஹ்வெல்லவில் இருந்து சுமார் 30 மணி நேரத்திற்குப் பிறகு வந்தடையும் எனவும் தற்போதைய சூழலில், ஹங்வெல்ல அதன் உயர் நீர்மட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்காரணமாக, தற்போது 7.4 அடி அதிகரித்துள்ள கொழும்பு நாகலாகம் வீதியின் நீர்மட்டமானது நாளை (01.12.2025) காலை மேலும் அதிகரிக்கும் எனவும் குறித்த நீர் மட்டமானது குறைந்தது இரண்டு நாட்களுக்கு அந்த உயர்ந்த மட்டத்தில் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கொழும்பிலுள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/uRGA7RvR510

NO COMMENTS

Exit mobile version