நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் இன்று காலை வரை 344 குடும்பங்களை சேர்ந்த 1297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 204 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் 117 குடும்பங்களைச் சேர்ந்த 462 பேர் 09 தற்காலிக இடைத்தங்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
இதன்படி மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா கொட்லோட்ஜ் தோட்டம் சமர்ஹில் பாடசாலையில் அமைந்துள்ள தற்காலிக இடைதங்கள் முகாமில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் கோவிலில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு நுவரெலியா பௌத்த வழிபாட்டுத் தலத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாதுகாப்பான இடத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை குருதுஓயா அல்மா பாலர் பாடசாலையில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொத்மலை டன்சினன் கொரெஞ்சி பாடசாலையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹங்குரன்கெத்த திகலஹின்ன சனசமூக மண்டபம் மற்றும் ஹோப் பிரிவு தோட்ட நிலையங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திகலஹின்ன சனசமூக மண்டபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் ஹோப் பிரிவு தோட்டக் கட்டிடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 08 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தலவாக்கலை பொட்மோர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிலையத்தில் 08 குடும்பங்களும் 34 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை நகரசபை ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்கத்கது.