Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

0

பதுளை (Badulla) பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தை சேர்ந்த யாழ். இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று (23.11.2024) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த யாழ். இந்துக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம்

கடந்த 1ஆம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்ததுடன் பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர்.

இதன்போது, காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதிகரித்த உயிரிழப்பு

இந்நிலையில், படுகாயமடைந்திருந்த யாழ் இளைஞன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று(23) அதிகாலை 5:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவருடன் ஐந்தாக அதிகரித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version