Home இலங்கை சமூகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!

0

யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் இன்றையதினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானம் மாவட்ட இராணுவ தளபதிக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எழுத்து மூலம் அனுப்பப்படும் என சபையில் தவிசாளர் தெரிவித்துள்ளார். 

சபையின் கன்னி அமர்வு

யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று பிரதேச சபையின்
தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில் தெரிவித்ததாவது,

எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மீள்
குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள்,
அவர்களை மீள்குடியேற்றுவதற்காக எங்களுடைய சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற
அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைவருடைய ஒத்துழைப்பும் தேவையாக
இருக்கின்றது.

எங்களுடைய பல உறுப்பினர்கள் கூட தமது சொந்த நிலங்களுக்கு திரும்பாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு சென்று
இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு நாங்கள் அவர்களுக்கான நிலங்களை பெற்றுக்
கொடுப்பதோடு, அந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நடைபெறுகின்ற
அபிவிருத்தி திட்டங்களையும் நாங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு
இருக்கின்றது.

வேலை திட்டங்கள்

கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சினால் 182 மில்லியனுக்கும் மேற்பட்ட
ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும் அதற்கான வேலை திட்டங்கள் இன்னும்
ஆரம்பிக்கப்படால் இருக்கின்றது.

எங்களுடைய சபையின் பக்கமும் ஒரு சில தவறுகள் இருக்கின்றன,
அதற்கான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. நாங்கள் சபையை
பொறுப்பெடுத்த பின்னர் அதனை விரைவு படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது என
தெரிவித்தார்.

அத்தோடு கடந்த 2023 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை மீள அமைப்பதற்கு விரைவில் அதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து சபைக்கான நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டது.

பின்னர் சபையில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version