நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு தமிழ் விவசாய
சமுகத்தின் இணைப்பாளர் சிவலிங்கம் பரமேஸ்வரநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(06) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை
குறிப்பிட்டுள்ளார்.
நெல் கொள்வனவு
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் 70 வீதமான மக்கள் விவசாயத்தை
முன்னெடுக்கும் நிலையில், 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர்
வேளாண்மை பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
நேற்றைய தினம் பிரதி
அமைச்சர் நாமல் கருணாரத்ன விவசாயிகள் தொடர்பாக நெல் அறுவடை தொடங்க முன்னரே அது
தொடர்பான விலை நிர்ணயத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இந்த ஆட்சியினை ஏற்றுக் கொள்கின்றோம். விவசாயிகளுக்கு நல்ல விடயங்கள் ஏற்படும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இருப்பினும் எங்களுடைய மட்டக்களப்பு மாவட்டத்தை
பொருத்தவரையில் நெல் கொள்வனவு சந்தைப்படுத்தல் சபையில் 8 களஞ்சியசாலைகள்
உள்ளன.
இருப்பினும் தற்பொழுது 3 களஞ்சியசாலைகள் யானை தாக்கத்தினால்
சேதப்படுத்தப்பட்டுள்ளது. தும்பங்கேனி, கரடியனாறு மற்றும்
புலிபாய்ந்தகல் போன்ற நெல் களஞ்சியசாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.