கண்டி- தென்னகும்புர பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு
சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலங்கள் இன்று(10) காலை மகாவலி நீர்த்தேக்கத்தில் தென்னகும்புர பாலத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தரம் 8 மற்றும் தரம் 9 இல் கல்வி கற்கும் 13 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உடல்கள் மீட்பு
கடந்த புதன்கிழமை மாலை முதல் தனது மகனும் மற்றொரு சிறுவனும் காணாமல்
போயுள்ளதாக ஒரு சிறுவனின் தாய் பொலிஸில் முறைப்பாட்டை அளித்திருந்தார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சிறுவர்கள்
இருவரும் புதன்கிழமை அன்று மகாவலி கங்கைக்குச் செல்வதைக கண்டதாகப் பிரதேச
மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல்போன சிறுவர்களில் ஒருவர் மகாவலி கங்கையில் மிதந்த
நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றைய சிறுவனின் சடலமும்
இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சிறுவர்கள் இருவரும் மகாவலி கங்கையில் விளையாடிக்கொண்டிருக்கும் போது
அங்கிருந்த மீனவர் ஒருவர் கங்கையின் நீர் மட்டம் அதிகமாக உள்ளதால் கங்கையில்
நீராட வேண்டாம் என எச்சரித்தும், சிறுவர்கள் இருவரும் நீச்சல் தெரியும் எனக்
கூறி கங்கையில் தொடர்ந்து நீராடிக்கொண்டிருந்தனர் என்று பொலிஸ் விசாரணையில்
தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்- இந்திரஜித்
