எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கடமைகளையும் எந்தவித தடையுமின்றி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பு இதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த விடயம் குறித்து அவர்களுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்கவிடம் (R.M.A.L. Rathnayake ) வினவிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கிராம உத்தியோகத்தர்கள் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இன்று (12) மற்றும் நாளை (13) விலகியிருப்பதுடன் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைக்கான வாரமாக இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர் சேவை
இந்தநிலையில், வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் சேவை யாப்புக்கு தமது கோரிக்கைகள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க (Nandana Ranasinghe) தெரிவித்துள்ளார்.
மேலும், பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக இன்று (12) அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.