தேனிலவிற்கு சென்றவேளை கணவனை கூலிப்படையை வைத்து கொலை செய்தார் எனத் தெரிவித்து புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின்(india) மேகாலயா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மே 11 ஆம் திகதி இந்தூரில் இரு குடும்பத்தினரும் ஆசீர்வதித்த விழாவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.
திருமணமாகி எட்டு நாட்களில் தேனிலவுக்கு சென்ற தம்பதி
மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவரது மனைவி சோனம், 27; திருமணமாகி எட்டு நாட்களே ஆன புதுமண தம்பதி, தேனிலவுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயா சென்றனர். அங்கு கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்
மே 20 ஆம் திகதி இந்த ஜோடி மேகாலயாவுக்குச் சென்றது. ஆனால், பயணத்திற்கு நான்கு நாட்களுக்கு பின்பு, அவர்கள் காணாமல் போனார்கள்.
ஒரு வாரம் கழித்து, ராஜாவின் அழுகிய உடல் ஒரு பள்ளத்தாக்கில் அவரது தொண்டை அறுக்கப்பட்டு, அவரது பணப்பை, ஒரு தங்க மோதிரம் மற்றும் ஒரு சங்கிலி காணாமல் போன நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் சோனம் ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போனார்.
இதையடுத்து ராஜாவின் கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா என உறவினர்கள் உறுதி செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என காவல்துறையினர் விசாரித்தனர்.
மேகாலயா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய கொலை
புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் மேகாலயா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் மர்மம் விலகியது. கணவரை கொலை செய்ததை மனைவி ஒப்புக்கொண்டார். இறந்தவரின் மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சோனம் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை ஆள் வைத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
தற்போது விசாரணைகள் நடந்து வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ராஜாவின் கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
