Home இலங்கை சமூகம் தமிழர் தலைநகரில் பௌத்த பிக்குவின் அடாவடி: இன்னலுறும் தமிழ் மக்கள்

தமிழர் தலைநகரில் பௌத்த பிக்குவின் அடாவடி: இன்னலுறும் தமிழ் மக்கள்

0

திருகோணமலை (Trinco) – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்களை விவசாயம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு ஒருவர் அடாவடித்தனமாக செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

திரியாய் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட வளத்தாமலைப் பகுதியில் உள்ள தனது காணியில் மானாவரி
பெரும்போக நெற்செய்கைக்காக உழவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வருகைதந்த
சப்தநாக விகாரையின் விகாராதிபதி தடுத்து நிறுத்தியதாக குச்சவெளி காவல் நிலையத்தில் புல்மோட்டையைச் சேர்ந்த
புகாரி என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புல்மோட்டையைச் சேர்ந்த புகாரி என்பவர் வளத்தாமலைப்பகுதியில் உள்ள தனக்கும் தனது தாய்க்கு
சொந்தமான விவசாய காணியில் கடந்த 2020 ஆண்டு காலப்பகுதியில் இருந்து மானாவரி நெற்செய்கை
மேற்கொண்டு வந்துள்ளார்.

சிங்களவர்களுக்கு குத்தகை

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து குறித்த பௌத்த பிக்கு விவசாயம் செய்ய விடாமல் தடுத்ததாகவும் இதற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெற்று விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் மற்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட காணிக்குள் கற்களைப் போட்டு விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் புகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வளத்தாமலைப் பகுதியில் இருக்கின்ற திரியாயைச் சேர்ந்த தமிழ் மக்களுடைய உறுதி மற்றும் அனுமதிப்பத்திர காணிகளை பௌத்த பிக்கு வலுக்கட்டாயமாக பிடித்து பதவி ஸ்ரீபுர பகுதியில் இருக்கின்ற சிங்களவர்களுக்கு குத்தகைக்கு வழங்கி வருவதாகவும் இதனால் தமிழ் மக்கள்
விவசாயம் மேற்கொள்வதற்கு காணி இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தால் இடம்பெயர்ந்து பின்னர் மீள குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் தங்கள் காணியில் விவசாயம் மேற்கொள்ள வரும்போது பூஜா பூமி
எனக்கூறி விடுகின்றார்கள் எனவும் முறைப்பாட்டாளர் புகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா காலத்து உறுதி

1985 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆத்திக்காடு வளத்தாமலைப் பகுதியில் உள்ள
காணிகளில் திரியாய் மக்கள் காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட
வன்செயலின் காரணமாக திரியாய் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.

2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தகப்பட்ட நிலையிலும் தங்கள்
காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு வனவள பாதுகாப்பு திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள்
அனுமதி வழங்காத நிலையில் 2020 ஆம் ஆண்டு அரிசிமலை விகாரை விகாராதிபதியின் பெயரில் குச்சவெளி
கமநல சேவைகள் திணைக்களத்தின்கீழ் 82 ஏக்கர் காணிகள் பதிவு செய்யப்பட்டு இன்றுவரை நெற்செய்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குறித்த காணிகளுக்கான பிரித்தானியா காலத்து உறுதியும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட பல ஆவணங்கள் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.youtube.com/embed/6cVZV0TPfjo

NO COMMENTS

Exit mobile version