Home இலங்கை அரசியல் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தை ஆய்வு செய்ய விசேட குழு – ஐக்கிய மக்கள் சக்தி...

முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தை ஆய்வு செய்ய விசேட குழு – ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால்
முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தை ஆராய்ந்து, தர்க்க ரீதியிலான
கருத்துக்களை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

இதற்காக விசேட குழுவொன்றை அந்தக் கட்சி நியமிக்கவுள்ளது.

கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் மேலும் சில
பொருளாதார நிபுணர்கள் அந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.

கருத்தரங்கு நடத்த திட்டம்

அதேபோல் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்குக் கருத்தரங்கு நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெறுமனே விமர்சனங்களை முன்வைக்காமல், புள்ளிவிவரம் மற்றும் விஞ்ஞானபூர்வமான
கருத்துக்களை முன்வைக்கும் நோக்கிலேயே விடயங்களை எதிரணி எம்.பிக்களுக்குச்
சுட்டிக்காட்டுவதற்கு இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. இது 2ஆம்
வாசிப்பாகக் கருதப்படும்.

2ஆம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி
முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்பு மீதான
வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம்
திகதி ஆரம்பமாகும்.

பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு

பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி
நடைபெறும்.

தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்
அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

2026 பாதீட்டில் நிதி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (634
பில்லியன் ரூபா)

பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும், சுகாதார மற்றும் ஊடகத்துறை
அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 301
பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version