Home இலங்கை சமூகம் கல்லூண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது – கதை கூறும் மானிப்பாய் தவிசாளர்

கல்லூண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது – கதை கூறும் மானிப்பாய் தவிசாளர்

0

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படும் கல்லூண்டாய் குப்பை மேடானது
தானாக எரிவதாக மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதன் தெரிவித்ததாக
ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்து மேலும் தெரியவருகையில்,

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம்
மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் பகுதி காணப்படுகிறது.

அந்த கழிவு
சேகரிக்கும் பகுதியில் உள்ள குப்பை மேடுகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு
ஒரு தடவை தீப்பற்றி எரிவது வழமையான செயற்பாடாக மாறிவிட்டது.

மருத்துவ கழிவுப் பொருட்கள்

இவ்வாறு குப்பை மேடானது எரிவதனால் அங்கு காணப்படும் மருத்துவ, பிளாஸ்டிக் உட்பட
பல கழிவுப் பொருட்கள் அந்த தீயில் எரிந்து அதன்மூலம் வெளிப்படும் புகை அண்மைய
பகுதிகளில் உள்ள குடிமனைகளில் வசிக்கும் சிறியோர் முதல் பெரியோர் வரை,
வீதியில் செல்கின்ற மக்கள் என பலருக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், சுவாசம்
தொடர்பான நோய்கள் ஏற்படவும் வழிவகுக்கிறது. 

இந்நிலையில் நேற்றுமுன்தினமும் இவ்வாறு குப்பைமேடு தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அந்த தீயானது நேற்றுவரை (29) எரிந்தவண்ணம் காணப்பட்டது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதனுக்கு தொலைபேசி மூலம் இதனை தெரியப்படுத்திய நிலையில், அந்த
குப்பைமேடு தானாக எரிவதாக கூறப்படுவதாக தவிசாளர் தெரிவித்துள்ளதாக மக்கள்
கூறுகின்றனர்.

மேலும் நேற்றையதினம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை கல்லூண்டாய் பகுதி
மக்களும், மானிப்பாய் பிரதேச சபையின் சில உறுப்பினர்களும் வழிமறித்து
குப்பைகளை கொட்ட அனுமதிக்க முடியாது என முரண்பட்டனர்.

குப்பைமேடு எரிவது பற்றியும் 

இந்த சம்பவம் பற்றியும்,
குப்பைமேடு எரிவது பற்றியும் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதனுக்கு தெரியப்படுத்தியும் அவர் அந்த இடத்திற்கு வருகை தரவில்லை என
மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த காலத்தில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு
கட்சியின் உறுப்பினர் அ.ஜெபநேசனும், மாநகர சபையின் முதல்வராக வி.மணிவண்ணனும்
பதவி வகித்த காலப்பகுதியில் 2022.11.30 அன்றும் 2022.12.01 அன்றும் இதே குப்பை
மேட்டுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் போராட்டத்தில் அன்றைய மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன்,
இன்றைய மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதன், கட்சி பேதமின்றி
அனைத்து கட்சிகளினதும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும்
கல்லூண்டாய் பகுதி மக்கள் என அனைவரும் ஓரணியில் நின்று குப்பைமேட்டுக்கு
எதிராக போராடினர்.

ஆனால் தற்போது மானிப்பாய் பிரதேச சபையிலும், யாழ்ப்பாணம் மாநகர சபையிலும்
இலங்கை தமிழரசு கட்சியின் ஆட்சி காணப்படுகின்ற சூழ்நிலையிலும் மானிப்பாய்
பிரதேச சபையின் தவிசாளர் மௌனம் காப்பதும், பொறுப்பற்ற பதிலும் மக்கள்
மத்தியில் கேள்வியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version