மின்சார வாகனங்களில் முதலீடு செய்துள்ள நுகர்வோர், பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மின்சார வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீலக பிடகம்போல தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்கள்
இந்தநிலையில், இலங்கை சுங்கத்துறையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் மின்சார வாகனங்களின் இறக்குமதி செயல்முறையை சீரமைக்க அரசாங்கம் தலையிட வேண்டும் என அவர் வலியுருத்தியுள்ளார்.
உற்பத்தியாளர் சான்றிதழ்களை சுங்கத்துறை ஏற்க மறுத்ததாலும் மற்றும் மோட்டார் சக்தியை சரிபார்க்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக வசதிகள் இல்லாததாலும் நுகர்வோர் நம்பிக்கை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆய்வகங்களால் மட்டுமே மோட்டார் சக்தியை சரிபார்க்க முடியும்.
அத்தகைய வசதிகள் இல்லாமல் நடத்தப்படும் சோதனை அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தாது, நிலைமையை மேலும் மோசமாக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் மோட்டார் சக்தியை உறுதிப்படுத்த சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து உடனடியாக சோதனைகளைப் பெறுமாறு மின்சார வாகன உரிமையாளர்கள் சங்கம் இலங்கை சுங்கத்துறையை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
