Home இலங்கை சமூகம் இராவணனால் மறைக்கப்பட்ட விமானங்களை தேடும் முயற்சி ஆரம்பம்

இராவணனால் மறைக்கப்பட்ட விமானங்களை தேடும் முயற்சி ஆரம்பம்

0

இலங்கையின் பண்டைய தமிழ் மன்னரான இராவணனினால் மறைக்கப்பட்டதாக கூறப்படும் விமானங்களை தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராவணனினால் சுமார் 25 இடங்களில் 19 விமானங்களை மறைத்து வைத்ததாக கூறப்படுகின்றது.

இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட விமானங்களை கண்டு பிடிக்கும் நோக்கில் இலங்கை விமான போக்குவரத்து அதிகாரசபையின் (CAASL) ஆராய்ச்சி பிரிவு பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சோதனைகளை நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதி

மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் 25 இடங்களை ஆராய்ச்சி பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

மன்னன் இராவணனினால் உருவாக்கப்பட்ட இந்த விமானங்கள் பாதரசம் மற்றும் வேறும் இரசாயனங்களைப் பயன்படுத்தி இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆய்வுகள் மூலம் இந்த வவிடயம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மலைப் பகுதிகளில் உள்ள குகைகள் மற்றும் நிலத்தடி இடங்களில் இந்த விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல், வரியபொல, சிகிரியா, தம்புள்ளை, பதுளை, மஹியங்கனை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்கள் உள்ளிட்ட சில இடங்களில் இந்த விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இராவணனின் விமானங்களை இயக்குவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை உறுதிப்படுத்த ஒரே வழி கார்பன் சோதனை என இலங்கை விமான போக்குவரத்து அதிகாரசபையின் ஆராய்ச்சி பிரிவு பிரதானி நுரங்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், ஒரு கார்பன் சோதனைக்கு 20 இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவாகும் எனவும், இலங்கையில் இத்தகைய சோதனைகளை நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதி கிடையாது எனவும் தெரிவித்தள்ளார்.

இவ்வாறான அதி உயர் தொழில்நுட்ப ஆய்வுகளை அமெரிக்காவில் மட்டுமே செய்ய முடியும் அவர் தெரிவித்துள்ளார்.

இராவணனின் விமானம் 

கடந்த 2020ம் ஆண்டில் இந்த ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நிதி பற்றாக்குறை காரணமாக ஆய்வுகள் இடைநடுவில் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது தகவல்களை திரட்டுவதற்காக ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டதாகவும், இதில் இந்திய ஆய்வாளர்களும் பங்கேற்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் குழு உறுப்பினராக அங்கம் வகித்தார் எனவும் பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வில் உள்நாட்டு நிபுணர்கள் பலரும் பங்கேற்றிருந்த போதிலும் இடைநடுவில் கைவிடப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இராவணனின் ஒரு விமானமேனும் கண்டு பிடிக்கப்பட்டால் உலகில் விமானத்தை கண்டு பிடித்தவர்கள் தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ரைட் சகோதாரர்களினால் விமானம் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இராவணனின் விமானம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் ரைட் சகோதரர்களுக்கு முன்னதாகவே விமானம் கண்டு பிடிக்கப்பட்டது என்பதை உலகிற்கு உறுதிப்படுத்த முடிந்திருக்கும்.

எதிர்வரும் ஆண்டில் இராவணனின் விமானங்களை கண்டு பிடிக்கும் பணிகள் மீளத் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version