பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் பத்து பேரை அச்சுறுத்தி, முழங்காலிட
வைத்து, அவர்கள் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க
அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றவியல்
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இன்று வியாழக்கிழமை அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட போது விசாரணைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட
சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் சட்டத்தரணி வெனிசலலஸ் துஷான் ஆகியோர் இன்று
மன்றில் முன்னிலையாகினர்.
வழக்குத் தொடர்பான வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் எதிரித் தரப்புக்கு
ஒப்படைக்கப்பட்டு விட்டன எனத் தெரிவிக்கப்பட்டமையை அடுத்து நீதிவான்
வழக்குக்கான திகதியை நிர்ணயம் செய்தார்.
அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
இதே விடயத்தை ஒட்டி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இப்போது விசாரணைக்கான கட்டத்தை நெருங்கி
உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 30 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்போது இந்த வழக்கில்
எதிரியினால் துப்பாக்கி வைத்து அச்சுறுத்தப்பட்டவர் எனக் கூறப்படும்
பூபாலசிங்கம் சூரியபாலன் மற்றும் ஏழாவது சாட்சியமான அவரின் விடயங்களை
சிங்களத்தில் மொழி பெயர்த்தவரான மதியரசன் சுலக்ஷன் ஆகிய இருவரையும் சாட்சியம்
அளிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அரச தரப்பின் பரிந்துரைக்கமைய
நீதிவான் உத்தரவிட்டார்.
2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 12ஆம் திகதி லொஹான் ரத்வத்தையால்
மிரட்டப்பட்டவர்கள் என்று கூறப்படும் 10 தமிழ் கைதிகளும் இப்போது
விடுவிக்கப்பட்டு விட்டனர் அல்லது பிணையில் விடப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.